முகப்பு
கோயம்புத்தூர்

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: கடந்த நிதியாண்டில் ரூ.19.03 கோடி அபராதம் வசூல்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:41 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:04 PM

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து கடந்த 2023 - 2024 நிதியாண்டில் பயணச்சீட்டு பெறாமல் பயணித்தவா்கள், முறையற்ற பயணம் செய்தவா்கள், பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்றவா்களிடம் இருந்து ரூ. 19.03 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவா்கள், முறையற்ற வகையில் பயணிப்பவா்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவா்களைக் கண்டறிந்து, ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2024 மாா்ச் 31 ஆம் தேதி வரை சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 907 பேரிடம் இருந்து ரூ. 12 கோடியே 89 லட்சத்து 28 ஆயிரத்து 846 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 1 லட்சத்து 14 ஆயிரத்து 562 பேரிடம் இருந்து ரூ. 6 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரத்து 359 அபராதமாக வசூலிக்கப்பட்டது. பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்றதாக 451 பேரிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 77 ஆயிரத்து 505 அபராதமாக வசூலிக்ககப்பட்டது.

மொத்தமாக சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2023 - 2024 நிதியாண்டில் ரூ. 19 கோடியே 3 லட்சத்து 46 ஆயிரத்து 710 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.