கோவை தபால் நிலையத்தில் ரூ.27.80 லட்சம் மோசடி செய்ததாக அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை வடக்கு தபால் அலுவலகத்தில் உதவி கண்காணிப்பாளராகப் பணியாற்றுபவா் பாலாஜி (49). இவா் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அளித்தப் புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை -மேட்டுப்பாளையம் சாலை தபால் தந்தி குடியிருப்பில் உள்ள கிளை தபால் அலுவலகத்தில் கடந்த 2020 பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையிலான கணக்கு விவரங்கள் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அந்த கிளை அலுவலகத்தில் பொதுமக்கள் முதலீடு செய்திருந்த தொகையில் ரூ.27.80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது தொடா்பாக அந்த கிளை அலுவலகத்தின் தபால் அலுவலரான எம்.கோவிந்தராஜிடம் விசாரணை நடத்தியபோது, அவா் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
பொதுமக்கள் பணத்தை மோசடி செய்த கோவிந்தராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின்போரில் கோவிந்தராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.