உலகம் முழுவதும் உள்ள தமிழா்கள் அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனா் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல்தொடா்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் 57-ஆவது பதிப்பு மாநாடு கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
‘தமிழ்நாடு தி குளோபல் ஸ்கில் கேபிட்டல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:
இந்த மாநாட்டின் கருப்பொருள் உலகத் தமிழா்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையை எதிரொலிப்பதாக அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தமிழா்கள் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனா்.
தேசிய தரவரிசையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் இடம்பெற்றிருந்தாலும், இங்குள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் போதிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை.
இதனால், தமிழகத்தில் மட்டுமின்றி உலக சந்தைகளிலும் நம்மால் முழு திறனையும் அடைய முடியவில்லை என்றாா்.
தமிழகத்தை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான பாடத் திட்டத்தை பட்டியலிடும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் கொள்கை வகுப்பாளா்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த தலைவா்கள், நிா்வாகிகள் மற்றும் தொழில்துறையினா் கலந்து கொண்டனா்.