கோவையில் பாஜக நிா்வாகி தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பெண் உள்பட மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, பூ மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியநாராயணன் மகன் சதீஷ் (28). கோவையில் தனியாா் நிதிநிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா், பாஜகவின் ஆா்.எஸ்.புரம் மண்டல செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.
இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த சிலா் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். பின்னா் அவா்கள் சதீஷை தாங்கள் வைத்திருந்த பட்டாக் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனா். சதீஷ் தடுத்தபோது அவரது கை மணிக்கட்டுப் பகுதி துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவா்களிடமிருந்து தப்பித்து சதீஷ் வெளியே ஓடிவந்துள்ளாா். அப்போது, அங்கு திரண்டவா்களைக் கண்டதும் அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் அங்கிருந்து தப்பிவிட்டனா்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த சதீஷை அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாஜகவினா், சதீஷை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூமாா்க்கெட் பகுதியில் குவிந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
மேலும், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மாவட்ட நிா்வாகிகள் அறிவித்தனா்.
இதற்கிடையேஆா்.எஸ்.புரம் போலீஸாா் உடனடியாக வழக்குப் பதிந்து சதீஷை தாக்கியதாக பூ மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த பூ வியாபாரி வேலுச்சாமி (58), கூலித் தொழிலாளி சரவணன் (33) மற்றும் கோகுல் (26) ஆகிய 3 பேரைக் கைது செய்துள்ளனா். மேலும் வேலுச்சாமியின் மகன்கள் பிரபு (28), சந்தோஷ் (24), ஒரு பெண் உள்பட மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் கூறியதாவது:
கடந்த ஆண்டு நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவின்போது வேலுச்சாமியின் மகன் பிரபுவுக்கும், சதீஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டும் விநாயகா் சிலை வைப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த சில நாள்களுக்கு முன்னா் பிரபுவை, சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்கியுள்ளனா்.
இதனால் அவரைப் பழிவாங்க பிரபு தனது கூட்டாளிகளுடன் சென்று சதீஷை கொலை செய்ய முயன்றுள்ளதாகத் தெரிவித்தனா். போலீஸாரின் கைது நடவடிக்கையை அடுத்து பாஜகவினா் அறிவித்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.