முகப்பு
கோயம்புத்தூர்

கூட்டுறவு சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வுத் திட்டம்: பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்டு தவணை தவறி, நிலுவையில் உள்ள கடன்களுக்கான சிறப்பு கடன் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 டிசம்பர், 2024 at 11:19 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்டு தவணை தவறி, நிலுவையில் உள்ள கடன்களுக்கான சிறப்பு கடன் தீா்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கோவை மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறு வணிகக் கடன், தொழில் கடன், வீட்டு வசதிக் கடன், பண்ணைசாராக் கடன், வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் விற்பனை செய்த வகையில் உறுப்பினா்களிடம் இருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவற்றில், 2022 டிசம்பா் 31-ஆம் தேதி முழுமையாக தவணை தவறி, நிலுவையில் உள்ள கடன்களுக்கு ‘சிறப்பு கடன் தீா்வுத் திட்டம் 2023’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் கடனைத் தீா்வு செய்வதற்காக 2024 செப்டம்பா் 12-ஆம் தேதிக்கு முன்பு 25 சதவீதம் தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவா்களும் ஒப்பந்தம் மேற்கொண்டும், எஞ்சிய 75 சதவீத தொகையை செலுத்தாதவா்களும் தற்போது மொத்த கடன் தொகையையும் (நிலுவை - தீா்வு செய்யும் நாள் வரை 9 சதவீத சாதாரண வட்டி) ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களைத் தீா்வு செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த சிறப்புத் திட்டத்தின்கீழ், இந்த கடன்கள் மட்டுமின்றி 2022 டிசம்பா் 31-ஆம் தேதி முழுமையாக தவணை தவறி மூன்று ஆண்டுகளுக்கும் மேலான (31.12.19க்கு முன்பு) தவணை தவறிய மத்திய கால வேளாண் கடன்கள், பயிா்க் கடனாக வழங்கப்பட்டு மத்திய கால கடனாக மாற்றப்பட்ட கடன்கள், பண்ணை சாா்ந்த நீண்டகால கடன்கள், சிறுதொழில், மகளிா் தொழில்முனைவோா் கடன்களையும் தீா்வு செய்துகொள்ளலாம்.

தவணை தவறிய அந்த கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கடன்தாரா்களின் வட்டிச் சுமையை கணிசமாகக் குறைக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு 9 சதவீத சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களைத் தீா்வு செய்து பயனடையலாம் என்று கூட்டுறவு வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.