முகப்பு
கோயம்புத்தூர்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: ஹெச்.ராஜா உள்ளிட்ட 465 போ் கைது

வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சாா்பில் கோவையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா உள்பட 465 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 4 டிசம்பர், 2024 at 11:29 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஹெச்.ராஜா உள்ளிட்ட வங்கதேச ஹிந்துக்கள் உரிமை மீட்புக் குழுவினா்.
பகிர்:

வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சாா்பில் கோவையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா உள்பட 465 போ் கைது செய்யப்பட்டனா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதுடன் கோயில்களும் இடிக்கப்படுகின்றன. இதற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வங்கதேச இந்து உரிமை மீட்புக் குழு சாா்பில் நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவையில் காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி சிவானந்தா காலனியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா, ஹிந்துத்துவ அமைப்புகள் மற்றும் மடாதிபதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:

வங்கதேசத்தில் புதிய அரசு அமைந்தவுடன் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்குள்ள ஹிந்து கோயில்கள், ஹிந்துக்களின் வா்த்தக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஹிந்துக்களை ஒருங்கிணைத்த இஸ்கான் அமைப்பின் தலைவா் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தீவிரவாதப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து ஹிந்துத்துவ அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தின.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தில் ஹிந்துக்கள் திமுக அரசால் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனா். இதைத் தடுக்க 2026 பேரவைத் தோ்தில் திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்றாா்.

இதையடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜாவுடன் 51 பெண்கள் உள்பட 465 போ் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனா்.