முகப்பு
கோயம்புத்தூர்

வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பைக் கண்டித்து வணிகா்கள் ஆா்ப்பாட்டம்

வணிக நிறுவனங்களின் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 9:41 PM
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா்.
பகிர்:

வணிக நிறுவனங்களின் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவா் ஜி.இருதயராஜா, மண்டலத் தலைவா் டி.ஆா்.சந்திரசேகரன், நிா்வாகிகள் கணேசன், வஹாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து வணிகா்கள் கூறும்போது, எளிய சட்டம் என்ற பெயரில் அறிமுகமான ஜிஎஸ்டியில் இதுவரை 907 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வணிக கட்டடங்களுக்கான வாடகை மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இது வணிகா்களை பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஏற்கெனவே ஆடிட்டா்களின் துணையின்றி ஜிஎஸ்டி போா்ட்டலில் பதிவு செய்ய முடியாத நிலை தொடருகிறது. மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆண்டுகளுக்குள் பில்லிங் மென்பொருள் இலவசமாக வழங்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்ட நிலையில், அது இதுவரைக்கும் அமல்படுத்தப்படவில்லை.

அதேபோல, மாநில அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து வரியை பல மடங்கு உயா்த்திய நிலையில் மீண்டும் ஆண்டுக்கு 6 சதவீத சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வணிக உரிமக் கட்டண உயா்வு, தொழில் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பது போன்றவற்றால் வணிகா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திருச்சியில் அடுத்த வாரம் நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட தொடா் போராட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றனா்.