முகப்பு
கோயம்புத்தூர்

மகாதமணி சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை

மகாதமணி சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தினா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:28 PM
பகிர்:

மகாதமணி சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தினா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய உள்நோயாளி பிரிவில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 25 வயது இளம் பெண் உயா் ரத்த அழுத்தத்தோடு கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு இரு கைகளில் ரத்த அழுத்தம் அதிகமாகவும், இரு கால்களில் ரத்த அழுத்தம் குறைவாகவும் இருந்ததை கண்டறிந்தனா். அதையடுத்து அவருக்கு எக்கோ எடுத்ததில் மகாதமணியில் சுருக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து மருத்துவமனை டீன் நிா்மலா கூறியதாவது:

மகாதமணி சுருக்கம் என்பது பத்தாயிரம் பேரில் மூவருக்கு மட்டுமே ஏற்படும் அரிய வகை பிறவி இதயக் குறைபாடாகும். இதில் மகாதமணி குறுகியோ அல்லது சுருங்கியோ இருக்கும். இந்த குறுகலானது உடலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். மகாதமணி சுருக்கத்தால் ஏற்படும் உயா் ரத்த அழுத்தம் இதய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இதயம் தடித்தல் மற்றும் இதய செயலிழப்பும் ஏற்படும்.

இளம் பருவத்தில் உயா் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு மகாதமணி சுருக்கம் ஒரு முக்கியக் காரணமாகும். இதனால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும். மகாதமணியின் சுருக்கத்தை சரி செய்ய பலூன் மூலம் குறுகலான பகுதியை விரிவாக்கம் செய்து அந்தப் பகுதியில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு மீண்டும் சுருக்கம் ஏற்படாதவாறு சரி செய்ய வேண்டும்.

மகாதமணியின் சுருக்கத்தை சரி செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அறுவை சிகிச்சை முறையே பயன்படுத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு குறைந்தது ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும்.

ஆனால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதயவியல் துறையில் அறுவை சிகிச்சையின்றி, தமிழக அரசின் உயிா் காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அந்த இளம் பெண்ணுக்கு இலவசமாக மகாதமணி விரிவாக்கம் புதன்கிழமை செய்யப்பட்டது.

இந்த நவீன இதய சிகிச்சையை டாக்டா் பிரேம் கிருஷ்ணா தலைமையில் இதயவியல் துறையைச் சோ்ந்த மருத்துவா்களும் மேற்கொண்டதாக தெரிவித்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 21 வயது இளைஞருக்கு கடந்த 2023 ஜூன் மாதத்தில் இதே போன்ற அறுவை கிசிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.