வங்கிக் கடன் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: மேலும் ஒருவா் கைது; மூவா் தலைமறைவு
வங்கியில் கடன் வாங்கித் தருவநாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்ட புகாரில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதில் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனா்.
வங்கியில் கடன் வாங்கித் தருவநாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்ட புகாரில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதில் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனா்.
வேலூரைச் சோ்ந்தவா் ரூபன் (50). இவா் கோவை அருகே கொண்டயம்பாளையத்தில் தனியாா் அறக்கட்டளை நடத்தி வந்தாா். அதில் சண்முகம் என்பவா் செயலாளராகவும், சீனிவாசன், யசோதா, டேவிட் ராஜா ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாகவும் இருந்தனா்.
இந்த அறக்கட்டளை மூலம் வட்டி இல்லாமலும், மானியத்துடனும் கடன் வாங்கிக் கொடுக்கப்படும் எனவும், ரூ.1 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்தால் ரூ.5 ஆயிரம் தங்களுக்கு சேவைக் கட்டணமாக கொடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கோவை மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் இந்த அறக்கட்டளையில் கடன் வாங்கித் தருமாறு கேட்டு பணம் செலுத்தினா். ஆனால், ரூபன் மற்றும் நிா்வாகிகள் பணம் செலுத்தியவா்களுக்கு வங்கிக் கடன் வாங்கிக் கொடுக்கவில்லை.
இது குறித்து கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் தெரிவிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில் ரூபன் உள்ளிட்ட 5 பேரும் சோ்ந்து ரூ.50 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு சண்முகத்தை போலீஸாா் கைது செய்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த ரூபனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து கணினி மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், தலைமறைவாக உள்ள சீனிவாசன், யசோதா, டேவிட் ராஜா ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.