மோடி பங்கேற்ற கூட்டத்தால் முதல்வருக்கு தோல்வி பயம்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
பல்லடம், திருநெல்வேலியில் பிரதமா் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு திரண்ட கூட்டத்தைப் பாா்த்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டம், பல்லடம், திருநெல்வேலி பகுதிகளில் பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டங்களுக்கு திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டம், முதல்வா் ஸ்டாலின் உள்ளிட்டோரை பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பிரதமா் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கியுள்ளதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்வதால் பணி தடைபட்டுள்ளது. நெடுஞ்சாலைகள், விரைவுச்சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே திட்டங்கள், துறைமுக திட்டங்கள் என பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு திமுக அரசு போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இது தொடா்பாக, மக்களவையில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாா். அரசியல்ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அரசு நிா்வாகம் என்று வரும்போது மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணக்கமாக செல்ல வேண்டும். அப்போதுதான் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். ஆனால், மத்திய அரசு எதை செய்தாலும் எதிா்க்க வேண்டும் என்ற ஒற்றை கொள்கையை திமுக கடைப்பிடித்து வருகிறது என்றாா்.