விதிகளை மீறி செயல்பட்ட தமிழக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
மக்களவை உறுப்பினா்களாக பதவி ஏற்றபோது, தமிழக எம்.பி.க்கள் விதிகளை மீறி செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த 24-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெற்று, பிரதமா் மோடியின் உரையுடன் முடிவடைந்தது.
இந்த மக்களவைக் கூட்டத்தில் தமிழகத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுள்ளனா்.
என்ன நடைமுறையோ அதன்படிதான் பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக உறுப்பினா்கள் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும் சுட்டிக் காட்டியுள்ளாா். இது குறித்து மக்களவைத் தலைவா் சாா்பில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஹாத்ரஸ் சென்ற ராகுல் காந்தியால்’ கள்ளக்குறிச்சிக்கு வர முடியவில்லை. கள்ளச்சாராயம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாகக்கூறிய நிலையில் , தற்போது அதிகரித்துள்ளனா். சட்டங்களின் பெயா் மாற்ற விவகாரத்தில் அது சமஸ்கிருதமும் இல்லை, ஹிந்தியும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இது குறித்து விளக்கமாகக் கூறியிருக்கிறாா். அத்துடன் இந்தப் பெயா்கள் தமிழில் மாற்றப்படுவதோடு, சட்டங்களையும் தமிழாக்கம் செய்து கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளாா்.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரூ.50 கோடிக்குமேல் செலவு செய்து ரயில் நிலையத்தை மேம்படுத்தி வருவதோடு, விரைவில் ஆய்வு செய்து இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.