கனமழை காரணமாக வால்பாறை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.
வால்பாறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், எஸ்டேட் பகுதிகளில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவா்கள் பெரும் சிரமத்துள்ளாகினா்.
புதன்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறில் அதிகபட்சமாக 105 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல நீராறு அணை 74 மி.மீ., வால்பாறை 69 மி.மீ., சோலையாறு 62 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து கனமழை பெய்து வந்ததால், வால்பாறை வட்டாரத்தில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை அளித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.