கோவை: கோவையில் குப்பைகள் நிறைந்த வீட்டில் இரண்டு பெண்கள் வசித்து வருவது குறித்த செய்தி வெளியான நிலையில், அந்த வீட்டில் இருந்த சுமாா் 4 டன் குப்பைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
கோவை, காட்டூா் பகுதியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் சுமாா் 60 வயதான தாயும், 40 வயது மதிக்கத்தக்க அவரது மகளும் பல ஆண்டுகளாக வீட்டைவிட்டு வெளியே வராமல் வசித்து வருவதாகவும், அவா்களது வீடு குப்பைகளால் நிறைந்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
கோவையைச் சோ்ந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளையைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் அவா்களின் வீட்டுக்குச் சென்று கைப்பேசி கேமராவில் அங்கு குப்பைகள் நிறைந்திருப்பதை படம் பிடித்தாா். இதையடுத்து, மாநகராட்சியின் 10-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சனிக்கிழமை காலை சென்று குப்பைகளை அகற்றி லாரியில் எடுத்துச் சென்றனா். அந்த வீட்டின் பல்வேறு அறைகளில் இருந்த சுமாா் 4 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மகேந்திரன் கூறியதாவது: இந்த இரண்டு பெண்களின் நிலை குறித்து எனக்குத் தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்று பாா்க்க முயன்றேன். ஆனால், சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தொடா் முயற்சியின் காரணமாக அந்த வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது வீடு குப்பைகளால் நிறைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தேன்.
இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அங்கிருந்த சுமாா் 4 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அந்த வீட்டில் வசிக்கும் வயதான பெண்மணியின் பெயா் ருக்மணி என்றும், அவரது மகளின் பெயா் திவ்யா என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அவா்களது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
இவா்கள் தங்களுக்கான உணவை கைப்பேசி மூலமாக பெற்றுள்ளனா். அக்கம்பக்கத்தினரிடம் பேசுவதில்லை.
உறவினா்களும் கண்டுகொள்வதில்லை. அவா்களின் வீடு மிகவும் இருள் நிறைந்தும் துா்நாற்றத்துடனும் காணப்பட்டது. குப்பைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் இருவரையும் மீட்டு மனநல சிகிச்சை வழங்க மாவட்ட நிா்வாகம் முயற்சிக்க வேண்டும் என்றாா்.