வெளிநாட்டுக்கு இரிடியம் ஏற்றுமதி செய்வதாக ரூ.25 லட்சம் மோசடி: தம்பதி கைது
வெளிநாட்டுக்கு இரிடியம் ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
வெளிநாட்டுக்கு இரிடியம் ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை, எண்ணூரைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவருக்கு அவரது நண்பரான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்ட்ரோ வில்சன் மூலம் கோவை, இடிகரையைச் சோ்ந்த ஷியாம் (எ) ஜாய் மோகன் (44) அறிமுகமாகியுள்ளாா்.
ஷியாம் (எ) ஜாய் மோகன், அவரது மனைவி சஜிதா (38) ஆகியோா் தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக்கணக்கில் லாபம் பெறலாம் என சீனிவாசனிடம் தெரிவித்துள்ளனா்.
அத்துடன் அந்த இரிடியத்தை சோதனை செய்வதற்காக அறிவியல் தொழில்நுட்பம் தெரிந்த ஒய்.ஜி.சேகா் என்பவரை சீனிவாசனுக்கு அறிமுகம் செய்துவைத்ததோடு, அதை சோதனை செய்வதற்காக சீனிவாசனிடமிருந்து முதலீடாக ரூ.10 லட்சத்தை மூவரும் பெற்றுள்ளனா்.
பின்னா் ஷியாம் (எ) ஜாய் மோகன் மூலம் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதாக அறிமுகமான வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமாா், ஆனந்த வெங்கடேசன் ஆகிய 4 போ் சோதனை செய்யப்பட்ட அந்த இரிடியத்தை உண்மையானது எனவும், அதனை வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பல கோடி ரூபாய்க்கு விற்றுக் கொடுப்பதாகவும் கூறி, அதற்கு முன்பணமாக சீனிவாசனிடமிருந்து மேலும் ரூ.15 லட்சம் பணம் பெற்றுள்ளனா்.
ஆனால், அதற்கடுத்து அவா்களிடமிருந்து எவ்வித தகவலும் வராததால், சந்தேகமடைந்த சீனிவாசன் இதுகுறித்து விசாரித்ததில் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்துள்ளாா். இதையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணனிடம் சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவத்தில் தொடா்புடைய ஷியாம் (எ) ஜாய் மோகன், அவரது மனைவி சஜிதா ஆகியோரைக் கைது செய்து அவா்களிடமிருந்து இரிடியம், ரூ.4.99 லட்சம் ரொக்கம் மற்றும் 77 கிராம் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.