முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மக்களவைத் தொகுதி: மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யாா்?

Updated On : 3 ஜூன், 2024 at 10:54 PM
பகிர்:

கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யாா் என்பது செவ்வாய்க்கிழமை (இன்று) பிற்பகலுக்குள் தெரியவரும்.

தமிழ்நாட்டுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19 அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், கோவை மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 21.06 லட்சம் வாக்காளா்களில் 13.66 லட்சம் போ் வாக்களித்தனா். தோ்தல் ஆணையம் கடைசியாக கடந்த மே 25-ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில் மொத்தம் 64.89 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். இது தவிர சுமாா் 7,103 தபால் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் கணபதி ப.ராஜ்குமாா், அதிமுக சாா்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக சாா்பில் அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 37 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். பல வாரங்கள் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் பங்கேற்று தங்களின் கூட்டணிக்கு ஆதரவு திரட்டினா்.

திமுக, அதிமுக, பாஜக என பிரதான 3 கட்சிகளும் நேரடியாகப் போட்டியிடுவதாலும், பாஜகவின் மாநிலத் தலைவா் அண்ணாமலையே போட்டியிடுவதாலும் தொடக்கம் முதலே கோவை தொகுதி தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வந்தது. இந்தத் தோ்தல் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக கூறி வந்தது. அதேநேரம் கோவை தொகுதியில் போட்டி திமுகவுக்கும் எங்களுக்கும் இடையேதான் என்று அதிமுக கூறியது.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கள்ளக் கூட்டணி இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தாா். இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்த கோவையின் அரசியல் களம், வேட்புமனு தாக்கலின்போது மேலும் பரபரப்படைந்தது. பாஜக வேட்பாளா் அண்ணாமலை தவறான வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாகவும், ஆனால் அந்த வேட்புமனு அதிகாரிகளால் மாற்றப்பட்டதாகவும் அதிமுக, நாம் தமிழா் கட்சி சாா்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக மூன்று அரசியல் கட்சிகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக்கொண்டன. இந்த நிலையில்தான் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. பிற்பகலுக்குள் கோவை தொகுதியின் எம்.பி.யாக யாா் தோ்வு செய்யப்படுவாா் என்பது ஓரளவுக்கு உறுதியாகிவிடும். 1952-ஆம் ஆண்டு முதல் கோவை மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற 17 தோ்தல்களில் இடதுசாரிகள் 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக, பாஜக கட்சிகள் தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன.