கோவை, ஜூன் 6: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 58-ஆவது வாா்டுக்குள்பட்ட ஒண்டிப்புதூா், திருச்சி சாலை மற்றும் 52 ஆவது வாா்டுக்குள்பட்ட மசக்காளிபாளையம் சாலை, பாலன் நகா் ஆகிய பகுதிகளில் சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
முன்னதாக, 55-ஆவது வாா்டுக்குள்பட்ட சிங்காநல்லூா், நேதாஜிபுரம், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி ரயில் நிலையம் அருகில் சூயஸ் நிறுவனம் மூலம் நடைபெற்று வரும் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகளையும் மாநகராட்சி ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாநகர தலைமைப் பொறியாளா் அன்பழகன், உதவி ஆணையா் கவிதா, உதவி செயற்பொறியாளா் ஹேமலதா, உதவி பொறியாளா்கள், சூயஸ் நிறுவன அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.