முகப்பு
கோயம்புத்தூர்

கோவை வழியாக 6 விரைவு ரயில்களை இயக்கக் கோரி மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம்

Updated On : 8 மார்ச், 2024 at 1:20 AM
மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆா்.நடராஜன் எம்.பி. உள்ளிட்டோா்.
பகிர்:

வடமாநிலங்களில் இருந்து கேரளம் செல்லும் 6 விரைவு ரயில்களை, கோவை வழித்தடத்தில் இயக்கக் கோரி மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வடமாநிலங்களில் இருந்து கேரளம் செல்லும் 6 விரைவு ரயில்கள் கோவை ரயில் நிலையத்துக்குச் செல்லாமல் இருகூா், போத்தனூா் வழித்தடத்தில் இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல் பரவியது. இந்நிலையில், 6 விரைவு ரயில்களையும் கோவை வழியாக இயக்க வேண்டும், கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தந்தை பெரியாா் திராவிடக் கழகம் சாா்பில் மாட்டு வண்டியில் சென்று ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பின் மாநிலச் செயலாளா் கு.இராமகிருட்டிணன் அறிவித்திருந்தாா். அதன்படி, பல்வேறு கட்சியினா், அமைப்பினா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை காலை திரண்டனா். அங்கிருந்து மாண்டு வண்டிகளில் ரயில் நிலையத்துக்குச் சென்று ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தனா். அதில், கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் இருந்து கேரளம் செல்லும் 6 விரைவு ரயில்களையும் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும். பொள்ளாச்சி - திண்டுக்கல் அகல ரயில் பாதையில் கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும். அதேபோல, கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும். கோவை ரயில்கள் சிங்காநல்லூா், பீளமேடு ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை - மேட்டுப்பாளையம் ரயில் வழித்தடத்தை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தை கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தொடங்கிவைத்தாா். தபெதிக மாநிலப் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் முன்னிலை வகித்தாா். இதில், திமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தபெதிக உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →