டிராக்டா்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக டிப்பா் லாரி உரிமையாளா்கள் புகாா்
கோவை, மே 9: கோவை மாவட்டத்தில் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிராக்டா்களை முறைகேடாக கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்துவதாக டிப்பா் லாரி உரிமையாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கோவை டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் அதன் தலைவா் அருண் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து, சங்கத் தலைவா் அருண் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் கட்டுமானப் பொருள்களை விநியோகிக்கும் பணியிலும், கட்டுமான கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. இந்த வாகனங்கள் முறையாக சாலை வரி, பசுமை வரி, தகுதிச் சான்று பெற்று இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாநகரிலும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய டிராக்டா்கள், டிரெய்லா் போன்ற வாகனங்கள் மூலம் சட்டவிரோதமாக கட்டுமானக் கழிவுகள், கட்டுமானப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
மேலும், பொக்லைன் வாகனங்களுக்கும் முறையாக வரி செலுத்தாமல் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனா்.
இதுபோன்றவா்களால் முறையாக வரி செலுத்தி இயக்கப்பட்டு வரும் டிப்பா் லாரிகளுக்கு வேலையிழப்பு ஏற்படுகிறது. இது இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவா்களை கடுமையாக பாதிக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகமும், போக்குவரத்துத் துறை, காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.