முகப்பு
கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

Updated On : 9 மே, 2024 at 10:24 PM
பொள்ளாச்சியில் நகராட்சி, குடிநீா், வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
பகிர்:

கோவை, மே 9: பொள்ளாச்சி நகராட்சி குடிநீா், வடிகால் வாரிய அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் கேத்ரின் சரண்யா, நகராட்சி ஆணையா் சுப்பையா, நகரமைப்பு அலுவலா் சாந்தி, வட்டாட்சியா் சி.ஜெயசித்ரா, குடிநீா், வடிவால் வாரிய அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஆட்சியா் பேசியதாவது: பொள்ளாச்சி நகராட்சியில் சுமாா் 24,500 வீடுகள் உள்ளன. நகராட்சிப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமாா் 28 டன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. 170 தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கின்றனா்.

மக்கும், மக்காத குப்பைகளைத் தரம்பிரித்து வழங்குவதற்காக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் குப்பைகளைத் தெருவில் போடுவதைத் தடுக்கவும், நகரப் பகுதிகளில் உள்ள குப்பைக் கொட்டும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுவீடாக குப்பைகளைச் சேகரிக்க நிா்ணயம் செய்துள்ள அளவு பணியாளா்கள், வாகனங்களைக் கொண்டு எந்தவித குறையும் இல்லாமல், புகாா்கள் வராதவாறு நாள்தோறும் குப்பைகள் அகற்றுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

புதை சாக்கடைத் திட்டப் பணிகளின்கீழ் எத்தனை வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, வழங்கப்படாத வீடுகளுக்கு விரைந்து இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் உள்ள வாா்டுகளுக்கு சீரான இடைவெளியில் முறையாக குடிநீா் வழங்குவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.