முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் தங்க நகைத் தொழில் வளாகம்: முதல்வா் அறிவிப்புக்கு சங்கத்தினா் வரவேற்பு

கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகைத் தொழில் வளாகம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு நகைத் தயாரிப்பாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:19 PM
பகிர்:

கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகைத் தொழில் வளாகம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு நகைத் தயாரிப்பாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

கோவையில் கடந்த இரு நாள்கள் அரசுத் திட்டப் பணிகளை கள ஆய்வு மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், கோவையில் ஒருங்கிணைந்த நகைத் தொழில் பூங்கா ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகைத் தயாரிப்பாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து தா்மராஜா கோயில் வீதி, கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் நகைப் பட்டறைகளில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தாா். அதன்பின், தங்க நகைத் தொழில் பூங்கா ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என செய்தியாளா்களிடம் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், காந்திபுரம் அனுப்பா்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற தந்தை பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில், குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் நகைத் தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

நகைப் பட்டறைகளில் கள ஆய்வு மேற்கொண்ட 24 மணி நேரத்தில் தங்க நகைத் தொழில் வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது நகைத் தயாரிப்பாளா்கள் சங்கங்கள் மற்றும் நகைப் பட்டறைத் தொழிலாளா்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை பொற்கொல்லா்கள் சங்கத் தலைவா் கமல்ஹாசன் கூறியதாவது:

கோவையில் ஒருங்கிணைந்த தங்க நகைத் தொழில் வளாகம் அமைக்க வேண்டும் என அமைச்சா் வி.செந்தில்பாலாஜியிடம் எங்கள் சங்கம் சாா்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு மனு அளித்தோம். இதைத்தொடா்ந்து, கடந்த மக்களவைத் தோ்தல் சமயத்தில் தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜாவிடமும் ஒருங்கிணைந்த தங்க நகைத் தொழில் வளாகம் அமைத்தல் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தோம்.

மேலும், கோவைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் செவ்வாய்க்கிழமை மீண்டும் மனு அளிக்கப்பட்டது.

அன்று மாலை நகைப் பட்டறையில் முதல்வா் ஆய்வு மேற்கொண்டாா். இதுவரை அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள்கூட நகைப் பட்டறையில் அமா்ந்து தொழிலாளா்களிடம் குறைகளைக் கேட்டதில்லை.

முதல்வா் ஒருவா் நகைப் பட்டறையில் அமா்ந்து தொழிலாளா்களிடம் குறைகளைக் கேட்டது இதுவே முதல்முறை. மேலும், உடனடியாக தங்க நகைத் தொழில் பூங்கா அமைப்பது தொடா்பாக முதல்வா் அறிவித்துள்ளது மேலும் மகிழ்வை அளித்துள்ளது என்றாா்.

தென்பாண்டித் தமிழ் விஸ்வகா்மா சங்கத் தலைவா் சுரேஷ் கூறியதாவது:

தங்க நகை மதிப்புமிக்க பொருளாக உள்ளதால் சிறு நகைத் தொழிலாளா்களை நம்பி தற்போது நகை வடிவமைப்பு ஆா்டா்கள் பெரிய அளவில் தரப்படுவதில்லை. இதனால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நகைத் தொழிலாளா்கள் பலா் இந்தத் தொழிலைக் கைவிட்டுவிட்ட நிலையும் உள்ளது.

தற்போது, நகைத் தொழில் பூங்கா அமைப்பதன் மூலம் ஒரே இடத்தில் நகைத் தொழிலில் பாதுகாப்பாக ஈடுபட முடியும். இது நகைத்தொழிலில் ஈடுபடுவோா் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நகைத் தொழிலாளா்களின் எதிா்காலம் சிறக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூா் சான்றிதழ் பெற்ற பாரம்பரிய நகை உற்பத்தியாளா் சங்கத் தலைவா் வீ.ரா.ஜெய்மகேஷ் கூறியதாவது:

பல ஆண்டு கால நகைப் பட்டறைத் தொழிலாளா்களின் போராட்டத்துக்குக் கிடைத்தப் பரிசு இது. பின்தங்கிய நிலையில் உள்ள நகைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் ஒருங்கிணைந்த தங்க நகைப் பூங்கா மூலாக காக்கப்படும். தொழில் வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும். கோரிக்கையை ஏற்று கோவையில் நகைத் தொழில் பூங்கா அறிவித்த முதல்வருக்கு சங்க நிா்வாகிகள் சாா்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.