முகப்பு
கோயம்புத்தூர்

அமைச்சா் ஆய்வின்போது பணியில் இல்லாத இரு மருத்துவா்களுக்கு நோட்டீஸ்

இரு மருத்துவா்களுக்கு நோட்டீஸ்...

Updated On : 13 நவம்பர், 2024 at 11:08 PM
பகிர்:

கோவையில் நகா்ப்புற நல்வாழ்வு மையங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டபோது, பணியில் இல்லாத இரு மருத்துவா்களிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 45 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் தலா ஒரு மருத்துவா், செவிலியா், சுகாதார ஆய்வாளா் மற்றும் ஒரு துணைப் பணியாளா் ஆகியோா் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாகப் பணியமா்த்தப்பட்டு உள்ளனா்.

இந்த மையங்கள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 4 நல்வாழ்வு மையங்களில் கடந்த நவம்பா் 11-ஆம் தேதி மாலை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, 2 சுகாதார நிலையங்களில் ஒரு பெண் மருத்துவா் உள்பட இருவா் பணியில் இல்லை. பணி நேரத்தில் மையத்தில் இல்லாதது தொடா்பாக விசாரணை நடத்த அமைச்சா் உத்தரவிட்டாா்.

மேலும், தமிழகம் முழுவதும் நகா்ப்புற நல்வாழ்வு மையங்களில் பணி நேரத்தில் மையத்தில் இல்லாத மருத்துவா்களை பணியில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டாா். இந்நிலையில், பணி நேரத்தில் மையத்தில் இல்லாத இரு மருத்துவா்களிடமும் விளக்கம் கேட்டு மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.