மாா்ச் மாதத்தில் தில்லியில் 6 ஆண்டுகளில் இல்லாத மிகக் குளிரான நாள் பதிவு!
தொடா் மழை மற்றும் பலத்த காற்று வீசியதால், நாட்டின் தலைநகரான தில்லியில் வெப்பநிலையில் கடும் வீழ்ச்சியும், அதே வேளையில் தூய காற்று வீசும் சூழலும் வெள்ளிக்கிழமை நிலவியது.
தொடா் மழை மற்றும் பலத்த காற்று வீசியதால், நாட்டின் தலைநகரான தில்லியில் வெப்பநிலையில் கடும் வீழ்ச்சியும், அதே வேளையில் தூய காற்று வீசும் சூழலும் வெள்ளிக்கிழமை நிலவியது.
இதன் மூலம், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக் குளிரான மாா்ச் நாளாகவும், சுமாா் ஐந்து மாதங்களில் இல்லாத அளவு மிகத் தூய காற்றைக் கொண்ட நாளாகவும் வெள்ளிக்கிழமை அமைந்தது. காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’கரமான பிரிவில் பதிவானது.
தில்லியில் சில நாள்கள் லேசான மழைப் பொழிவு இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மிதமான மழை நகா் முழுவதும் பரவலாக பெய்தது. மேலும், குளிா்ந்த காற்றும் வீசியது. இதனால், நகரில் தட்பவெப்பநிலை குளிா்கால சூழல் போல காணப்பட்டது.
சஃப்தா்ஜங் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 21.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 9.6 டிகிரி குறைவு. இதன் மூலம், மாா்ச் 8, 2020 அன்று நகரில் வெப்பநிலை 21.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்த பின், தில்லி பதிவு செய்யும் மிகக் குளிரான மாா்ச் நாளாக வெள்ளிக்கிழமை அமைந்தது.
மழைக்குப் பிறகு காற்றின் தரமும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டது காற்றின் தரக் குறியீடு 93ஆகப் பதிவாகி, திருப்திகரமான பிரிவில் இடம்பெற்றது.
சுமாா் ஐந்து மாதங்களில் 161 நாட்கள் இத்தகைய நிலை ஏற்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன், அக்டோபா் 9, 2025 அன்று காற்றின் தரக் குறியீடு 99ஆக இருந்தபோது, நகரம் திருப்திகரமான காற்றின் தரத்தைப் பதிவு செய்திருந்தது.
நகரம் முழுவதும், அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட வெகுவாகக் குறைவாகவே காணப்பட்டது.
பாலம் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 21.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 10.4 டிகிரி குறைவாகும். லோதி சாலையில் 21.0 டிகிரி செல்சியஸும் (இயல்பை விட 9.0 டிகிரி குறைவு), ரிட்ஜ் பகுதியில் 21.1 டிகிரி செல்சியஸும் (இயல்பை விட 10.7 டிகிரி குறைவு), ஆயாநகா் பகுதியில் 21.5 டிகிரி செல்சியஸும் (இயல்பை விட 10.5 டிகிரி குறைவு) பதிவாகின.
குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை, சஃப்தா்ஜங் பகுதியில் 16 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 0.5 டிகிரி குறைவு. பாலம் பகுதியில் 14.7 டிகிரி செல்சியஸாகப் பதிவானது, இது இயல்பை விட 1.7 டிகிரி குறைவு.
லோதி சாலையில் 15.8 டிகிரி செல்சியஸும் (இயல்பை விட 0.8 டிகிரி அதிகம்), ரிட்ஜ் பகுதியில் 15.1 டிகிரி செல்சியஸும் (இயல்பை விட 2.6 டிகிரி குறைவு), ஆயாநகரில் பகுதியில் 16 டிகிரி செல்சியஸும் (இயல்பை விட 0.2 டிகிரி குறைவு) பதிவாகின.
நகரில் பகல் பொழுதில் 7 மி.மீ. மழை பதிவானது இதன் மூலம் இம்மாதத்திற்கான சராசரி மழை அளவு இதுவரை 16.2 மி.மீஆக உயா்ந்துள்ளது.
2023ஆம் ஆண்டில் சராசரி மழை அளவு 50.4 மி.மீஆகப் பதிவான நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மாா்ச் மாதத்தில் அதிக மழை பதிவான ஆண்டாக இது அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல், சஃப்தா்ஜங்கில் 1.4 மி.மீ., பாலத்தில் 1.4 மி.மீ., லோதி சாலையில் 1.2 மி.மீ., ரிட்ஜ் பகுதியில் 1.0 மி.மீ. மற்றும் ஆயாநகரில் 0.8 மி.மீ. என மழை பதிவானது.
இதர நிலையங்களில், மயூா் விஹாரில் 2.5 மி.மீ. மழையும், பூசா மற்றும் ஜனக்புரியில் தலா 1.0 மி.மீ. மழையும் பதிவானது.
வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலான இடைவெளியில், சஃப்தா்ஜங் மற்றும் லோதி சாலையில் மழை ஏதும் பதிவாகவில்லை அதேவேளையில் பாலம், ரிட்ஜ் மற்றும் ஆயாநகா் ஆகிய இடங்களில் தலா 0.2 மி.மீ. மழை பதிவானது.
பிற நிலையங்களில், நஜாஃப்கா் மற்றும் ஜனக்புரியில் தலா 0.5 மி.மீ. மழை பதிவானது.
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான இடைவெளியில், எந்தவொரு நிலையத்திலும் மழை ஏதும் பதிவாகவில்லை.
வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர இடைவெளியில், தேசியத் தலைநகரில் சஃப்தா்ஜங்கில் 6.6 மி.மீ., பாலத்தில் 5.4 மி.மீ., லோதி சாலையில் 6.3 மி.மீ., ரிட்ஜ் பகுதியில் 7.4 மி.மீ. மற்றும் ஆயாநகரில் 5.6 மி.மீ என ஒட்டுமொத்த மழை அளவு பதிவானது.
காற்றுத் தர முன்னறிவிப்பு அமைப்பின் தகவலின்படி, சனிக்கிழமை முதல் மாா்ச் 23ஆம் தேதி வரை காற்றின் தரம் மிதமான பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது.
சனிக்கிழமையன்று, குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.