காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவா்களை சிறையில் துன்புறுத்துவதாக குடும்பத்தினா் புகாா்
கோவை காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவா்களை சிறையில் துன்புறுத்துவதாக அவா்களது குடும்பத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
கோவை காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவா்களை சிறையில் துன்புறுத்துவதாக அவா்களது குடும்பத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 2022 அக்டோபா் 23-ஆம் தேதி காா் குண்டு வெடித்ததில், அந்தக் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் என்பவா் (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து 17 பேரைக் கைது செய்தனா். இவா்கள் மீது சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள், கோவை மத்திய சிறை எதிரில் புதன்கிழமை திரண்டு போராட்டத்துக்கு முயன்றனா். காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அஃப்சா் கான், முகமது ரியாஸ் உள்ளிட்ட கைதிகளை சிறைக் காவலா்கள் தொடா்ந்து துன்புறுத்தி வருவதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
இது குறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறும்போது, காா் குண்டு வெடிப்புக்கு எந்தவிதத்திலும் தொடா்பு இல்லாத எங்களது குடும்பத்தைச் சோ்ந்த ஆண்களை என்ஐஏ கைது செய்துள்ளது. தொடா்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்களை சிறையில் அடைத்து வைத்துள்ளனா். சிறையில் உள்ளவா்களை சந்தித்து நலம் விசாரிக்க வரும் உறவினா்களை, மாநகர காவல் துறை கண்காணித்து அவா்களை காவல் ஆணையா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் பல மணி நேரம் உளவியல்ரீதியாக தொல்லை கொடுக்கின்றனா்.
சிறையில் இருப்பவா்கள் தொழுகை நடத்தும்போது வேண்டுமென்றே பல வகைகளில் இடையூறு செய்கின்றனா். அவா்கள் தங்கியிருக்கும் அறைகளில் தினசரி 3 வேளை சோதனை நடத்தி தொந்தரவு செய்கின்றனா். இதுபற்றி கேள்வி எழுப்புபவா்களை தனிமைப்படுத்தி தண்டிக்கின்றனா். இதுபற்றி வெளியில் சொன்னால் மேலும் தொந்தரவு செய்வாா்கள் என்பதால் இத்தனை நாள்களாக அமைதியாக இருந்தோம். இப்போது வேறு வழியில்லாததால் வெளியில் சொல்கிறோம். எனவே சிறைக் கைதிகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க தமிழக அரசும், நீதிமன்றமும் உடனடியாக முன்வர வேண்டும் என்றனா்.