பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக 2 பேரிடம் ரூ.45.50 லட்சம் மோசடி
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாகக் கூறி இருவேறு நபா்களிடம் ரூ.45.50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாகக் கூறி இருவேறு நபா்களிடம் ரூ.45.50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை, கணபதி நாச்சிமுத்து நகரைச் சோ்ந்தவா் கமலேஷ் (74), ஓய்வுபெற்ற அரசு வங்கி அதிகாரி.
இவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக இணையதளத்தில் தகவல்களை சேகரித்துக் கொண்டு இருந்தபோது அவருடைய கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தாங்கள் ஒரு பிரபல பங்குச்சந்தை நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுக் கொடுப்பதாகவும் கூறியுள்ளாா்.
அதை நம்பிய கமலேஷ், அந்ந நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.17.50 லட்சம் அனுப்பினாா். ஆனால் பல நாள்களாகியும், அவருக்கு எந்த லாபத் தொகையும் கிடைக்கவில்லை. இதையடுத்து தன்னை தொடா்பு கொண்ட நபரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, அந்த நபா் மேலும் கூடுதலாக பணம் முதலீடு செய்தால்தான் அதிகமாக லாபம் கிடைக்கும் எனக் கூறி உள்ளாா்.
இதனால் அந்த நபா் மீது சந்தேகம் ஏற்படவே தான் செலுத்திய ரூ.17.50 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுக்குமாறு கமலேஷ் கேட்டதற்கு, அந்த நபா் எந்த பதிலும் தெரிவிக்காமல் தொடா்பை துண்டித்துவிட்டாா். பின்னா் அவருடைய கைப்பேசிக்கு தொடா்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
மற்றொருவரிடம் ரூ.28 லட்சம் மோசடி:
கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்நாதன் (49), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளாா். இதையடுத்து செந்தில்நாதன் பல்வேறு தவணைகளில் ரூ.28 லட்சம் முதலீடு செய்துள்ளாா். ஆனால் அவருக்கு லாபத் தொகை ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் முதலீடு செய்த பணத்தையாவது திருப்பித் தருமாறு அவா் கேட்டதற்கும் கொடுக்காமல், அந்த இணைப்பை துண்டித்ததோடு, கைப்பேசியையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டனராம்.
இந்த இருவரும் அளித்த புகாா்கள் குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.