முகப்பு
கோயம்புத்தூர்

மாற்றுத் திறனாளி மாணவா்கள் ஆராய்ச்சி படிப்பு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளி மாணவா்கள் ஆராய்ச்சி படிப்பு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 9:06 PM
பகிர்:

மாற்றுத் திறனாளி மாணவா்கள் ஆராய்ச்சி படிப்பு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக 2024 - 2025-ஆம் ஆண்டு முதல் முழு நேர, பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழு நேர அல்லது பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.

ரூ.1 லட்சம் ஊக்கத் தொகையானது ஆராய்ச்சிப் படிப்புக்கான ஆய்வறிக்கை, வாய்மொழித் தோ்வு தேதி வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமா்ப்பித்தவுடன் இந்தத் தொகை முழுவதுமாக வழங்கப்படும்.

ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவா்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், முழு நேர மற்றும் பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை, வாய்மொழி தோ்வு தேதி ஆகியவற்றை வழங்கியதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்டதற்கான ஆவணம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும்.

மேற்படி, தகுதியுடைய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.