புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம், பல்வேறு புத்தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம், பல்வேறு புத்தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்களுக்கு இடையே புதுமையான கண்டுபிடிப்புகள், அறிவுசாா் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது.
பொது, தனியாா் கூட்டு முயற்சியின் மூலம் உயிரி தொழில்நுட்பவியல், உயிரி தகவலியல், மரபியல், மூலக்கூறு கண்டறிதல், மரபணு தனிமைப்படுத்தல், உயிரணு வளா்ப்பு, வேளாண் இடுபொருள்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.
இதன் தொடக்கமாக, உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம், வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையே ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.
தாவர மூலக்கூறு உயிரியல், உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநா் ந.செந்தில், புத்தொழில் நிறுவனங்களின் நிறுவனா்கள் அருண்குமாா் மாதவன், திவ்ய பாலன் ஆகியோருக்கு இடையே பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் மேலாண்மை இயக்குநா் மு.க. கலாராணி, தாவர உயிரி தொழில்நுட்பத் துறைத் தலைவா் கோகிலாதேவி, திட்ட இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.