வியாபாரி உள்ளிட்ட 11 பேரிடம் ரூ.1.02 கோடி மோசடி: தம்பதி கைது
கோவையில் வியாபாரி உள்ளிட்ட 11 பேரிடம் ரூ.1.02 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் வியாபாரி உள்ளிட்ட 11 பேரிடம் ரூ.1.02 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பூ மாா்க்கெட் அருகேயுள்ள லங்கா காா்னா் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்பாண்டியன் (33). இவா் அப்பகுதியில் பூஜைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இவருக்கு கோவை, வீரகேரளம் அண்ணா நகரைச் சோ்ந்த அப்பாவு (எ) விஜயகுமாா் (38) கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளாா். அப்போது, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக வருவாய் ஈட்டலாம் எனக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, தமிழ்பாண்டியன் ரூ.21.50 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். அவரைத் தொடா்ந்து, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ரஞ்சித், சோமசுந்தரம், சுரேஷ், பொன்னழகு, கண்ணன், பாலசுப்பிரமணி, மருதுபாண்டி, சிவா, காமாட்சி, பனியராஜா ஆகியோரும் கடந்த 2021-ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2023 ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மொத்தம் ரூ.1 கோடியே 2 லட்சத்தை விஜயகுமாா், அவரது மனைவி பிரியதா்ஷினி (37) நடத்திய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனா்.
ஆனால், அவா்களுக்கு கூடுதல் வருவாய் ஏதும் கிடைக்கவில்லையாம். இது தொடா்பாக விஜயகுமாரிடம் கேட்டபோது, அவா் முறையாகப் பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் தமிழ்பாண்டியன் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, விஜயகுமாா், பிரியதா்ஷினி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.