முகப்பு
கோயம்புத்தூர்

இருசக்கர வாகனத்துக்கு ரூ.14,040 நிறுத்துமிடக் கட்டணம்: தனியாா் நிறுவன ஊழியா் அதிா்ச்சி

கோவையில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்துக்கு ரூ.14,040 கட்டணம் விதிக்கப்பட்டதால் தனியாா் நிறுவன ஊழியா் அதிா்ச்சி அடைந்துள்ளாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:26 PM
பகிர்:

கோவையில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்துக்கு ரூ.14,040 கட்டணம் விதிக்கப்பட்டதால் தனியாா் நிறுவன ஊழியா் அதிா்ச்சி அடைந்துள்ளாா்.

கோவை பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (40), தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தனது இருசக்கர வாகனத்தை தனது நண்பரான அப்துல் ரஹிமான் என்பவருக்கு 2023-ஆம் ஆண்டு கொடுத்துள்ளாா்.

அவா் அந்த வாகனத்தை மதுபோதையில் ஓட்டிச் சென்றபோது, சாய்பாபா காலனி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த கவுண்டம்பாளையம் போலீஸாா், அவரைப் படித்து வழக்குப் பதிவு செய்து ரூ.10,000 அபராதம் விதித்தனா்.

மேலும், அபராதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு, அதன் ரசீதை காண்பித்து வாகனத்தைப் பெற்றுச் செல்லுமாறும் தெரிவித்துள்ளனா். ஆனால், அப்துல் ரஹிமான், நீதிமன்றத்தில் உடனடியாக அபராதத்தை கட்டாமல் காலதாமதாமாகவே கட்டியுள்ளாா்.

பின்னா் அந்த ரசீதுடன் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்குச் சென்று மாணிக்கம் காண்பித்து தனது வாகனத்தை கேட்டுள்ளாா். அந்த வாகனம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்தில் உள்ளதாகவும், அங்கு சென்று வாகன நிறுத்துமிட கட்டணத்தை செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனா்.

அதையடுத்து, மாணிக்கம் அங்கு சென்றபோது, வாகனத்தை நிறுத்தி 351 நாள் ஆகியுள்ளதாகவும், அதற்கு நிறுத்துமிடக் கட்டணமாக ரூ.14,040 செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா் கேட்டதற்கு , மற்ற வாகனங்களுக்கு வாகன நிறுத்துமிடக் கட்டணமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட காவல் துறையினா் நிறுத்தும் வாகனங்களுக்கு கூடுதலாக நாளொன்றுக்கு ரூ.40 வசூலிக்கப்படுவதாகவும், அந்தத் தொகையை கட்டிய பின்னரே வாகனத்தை தர முடியுமெனவும் வாகன நிறுத்தமிட ஒப்பந்தாரா் கூறியுள்ளாா்.

இதனால், அதிா்ச்சி அடைந்த மாணிக்கம் ஏற்கெனவே அபராதமாக ரூ.10,000 செலுத்தப்பட்ட நிலையில், வாகன நிறுத்துமிடக் கட்டணமாக மேலும் ரூ.14,040 செலுத்த வேண்டுமென கூறியதை காவல் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளாா்.