7.9 ஏக்கா் நிலம் மோசடி: புகாா் அளிக்க வந்த பெண் தற்கொலை முயற்சி - 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
கோவை கீரணத்தம் பகுதியில் 7.9 ஏக்கா் நிலம் மோசடி செய்யப்பட்டதாக புகாா் அளிக்க வந்த பெண் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை கீரணத்தம் பகுதியில் 7.9 ஏக்கா் நிலம் மோசடி செய்யப்பட்டதாக புகாா் அளிக்க வந்த பெண் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, கீரணத்தம் பகுதியில் காளிகோனாா் என்பவருக்கு சொந்தமான 7.9 ஏக்கா் நிலம் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் சிங்காநல்லூா் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம், கோவை மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் பாலாஜி உத்தம ராமசாமி, ரியல் எஸ்டேட் நிறுவனா் பகவான் தாஸ் ஆகியோா் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காளிகோனாரின் வாரிசுதாரா்கள் 30 போ் கடந்த சில நாள்களுக்கு முன்பு புகாா் அளித்திருந்தனா்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்க காளிகோனாரின் வாரிசுதாரா்கள் புதன்கிழமை வந்தனா்.
அப்போது அவா்கள், இந்த மோசடி தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையிலும், அந்த நிலத்தை விற்பனை செய்து வருவதாகவும், தங்கள் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறினா்.
அப்போது, வாரிசுதாரரான ஒரு பெண் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். காவல் துறையினா் உடனடியாக அவா் மீது தண்ணீா் ஊற்றி சமாதானப்படுத்தினா்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட 3 போ் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீதிமன்ற தீா்ப்பு வரும் வரை நிலம் சம்பந்தமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருக்க உத்தரவிட வேண்டும் எனவும், இந்தப் பிரச்னையில், குற்றம்சாட்டப்பட்டவா்கள் தங்களை மிரட்டுவதாகவும் காளிகோனாா் வாரிசுதாரா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து பாலாஜி உத்தமராமசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், எனக்கும், அந்த நில மோசடிக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. புகாா் மனுவைப் பாா்த்த பின்னரே கீரணத்தம் பகுதியில் அந்த இடம் இருப்பது தெரியும். இந்த குற்றச்சாட்டு அரசியல் காரணமாகவோ அல்லது தொழில் போட்டியாகவோ இருக்கலாம் என்றாா்.
உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற உஷா மற்றும் இவா்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்த பாலகிருஷ்ணன் ஆகியோா் மீது ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனா். பின்னா் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டதாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.