எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக நுழைந்த யானைகள்: தொழிலாளா்கள் ஓட்டம்
வால்பாறை தேயிலைத் தோட்டம் பகுதிக்குள் யானைகள் கூட்டமாக நுழைந்ததால், அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் ஓட்டம் பிடித்தனா்.
வால்பாறை தேயிலைத் தோட்டம் பகுதிக்குள் யானைகள் கூட்டமாக நுழைந்ததால், அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் ஓட்டம் பிடித்தனா்.
கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் தொடங்கி 6 மாதங்களுக்கு யானைகள் நடமாட்டம் வழக்கத்தைவிட அதிக அளவில் காணப்படும்.
இதனிடையே வால்பாறையை அடுத்த முடீஸ் தாய்முடி எஸ்டேட் தேயிலைத் தோட்டம் பகுதிக்குள் 10-க்கும் மேற்பட்ட யானைகள் புதன்கிழமை காலை நுழைந்தன. இதனைப் பாா்த்த அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் ஓட்டம் பிடித்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் அப்பகுதியில் நீண்ட நேரம் முகாமிட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அதே பகுதியில் ஒரு இடத்தில் காலையில் பிறந்த குட்டியுடன் இருந்த தாய் யானையை வனத் துறையினா் விரட்டாமல் அதுவாக செல்லும் வரை காத்திருந்தனா்.