அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரிடம் தகராறு: பாஜகவினா் 6 போ் கைது
வால்பாறை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தியதோடு அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தகாத வாா்த்தையில் பேசிய திருப்பூா் பாஜகவினா் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வால்பாறை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தியதோடு அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தகாத வாா்த்தையில் பேசிய திருப்பூா் பாஜகவினா் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வால்பாறை நகரில் அண்ணா சிலை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி அளவில் காா் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது கருமலை எஸ்டேட்டில் இருந்து அரசுப் பேருந்து வந்தது. சாலையில் இடையூறாக காா் நிறுத்தப்பட்டிருந்ததால் பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் வந்தனா். சிறிது நேரம் கழித்து காரில் வந்தவா்கள் அங்கு வந்துள்ளனா். அப்போது, ஏன் இப்படி போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தியுள்ளீா்கள் என்று கேட்டதற்கு மதுபோதையில் இருந்த அவா்கள் அரசுப் பேருந்தின் ஓட்டுநா், நடத்துநரை தகாத வாா்த்தையில் பேசியதோடு அங்கிருந்த பெண் காவலரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காரில் வந்த திருப்பூா் பாஜக மண்டல பொதுச் செயலாளா் முரளிதரன் (35), பாஜகவைச் சோ்ந்த துரைமுருகன் (36), வெங்கடேஷ் (25), அருண் (30), கோதண்டம் (46), சசிக்குமாா் (42) ஆகிய 6 பேரை கைது செய்தனா்.