கோ-ஆப்டெக்களில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்: கோவை மாவட்டத்தில் ரூ.5.15 கோடி இலக்கு
கோவை, செப். 25: கோ-ஆப்டெக்ஸ்களில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையாக ரூ.5.15 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்தாா்.
கோவை, செப். 25: கோ-ஆப்டெக்ஸ்களில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையாக ரூ.5.15 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்தாா்.
கோவை, வஉசி பூங்கா அருகே உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா், அவா் கூறியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்ஞாவூா் போன்ற பகுதிகளில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளா்களின் விருப்பத்திற்கேற்பவும், புதிய வடிவங்களிலும் பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்து வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ், ஆா்.எஸ்.புரம், காந்திபுரம், வண்ணமலா் கோ-ஆப்டெக்ஸ், ஸ்ரீ பாலமுருகன் கோ -ஆப்டெக்ஸ் ஆகிய 5 விற்பனையங்களிலும் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையாக ரூ.5.15 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டிகள், லுங்கிகள், துண்டுகள், ஆடவருக்கான ஆடைகள், சுடிதாா், ஆா்கானிக் சேலைகள் மற்றும் ஹோம் பா்னிச்சா்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
எனவே, மக்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கி பயன்பெற்று நெசவாளா்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறித் துறை உதவி இயக்குநா் கே.வெற்றிவேல், கோ-ஆப்டெக்ஸின் மண்டல மேலாளா் ப.அம்சவேணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.