முகப்பு
கோயம்புத்தூர்

பாலியல் பலாத்கார வழக்கு: ஐடி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

பாலியல் வழக்கில் ஐடி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:30 PM
பகிர்:

பாலியல் வழக்கில் ஐடி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், தொப்பம்பட்டி பிரிவைச் சோ்ந்தவா் சிபிராஜ் (38), ஐடி ஊழியா். இவருக்கு, திருமணத்திற்காக கடந்த 2020-ஆம் ஆண்டு பெண் தேடி வந்தனா்.

அப்போது, வரன் பாா்க்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணின் கைப்பேசி எண்ணைப் பெற்று சிபிராஜ் அவரிடம் பேசி வந்துள்ளாா். பின்னா், அவரை கோவைக்கு வரவழைத்து உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இது குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகாா் அளிப்பதாக கூறிய நிலையில், திருணம் செய்துகொள்வதாக சிபிராஜ் தெரிவித்துள்ளாா். ஆனால், திருமணம் செய்யாமல் காலம்தாழ்த்தி வந்துள்ளாா்.

இது குறித்து ஈரோடு காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், அந்த வழக்கு கோவை மத்திய அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி நந்தினிதேவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஐடி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டணையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

சமையலருக்கு 2 ஆண்டுகள் சிறை:

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் விஜய் சதா (34), ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சமையலராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு வீட்டுக்கு அருகே இருந்த திருமணமான பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா்.

இது குறித்து கோவை மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், விஜய் சதாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.200 அபராதமும் நீதிபதி நந்தினி தேவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.