முகப்பு
கோயம்புத்தூர்

டாஸ்மாக் பணியாளா்களுக்கான தொகுப்பூதியத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளா்களுக்கான தொகுப்பூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:14 PM
பகிர்:

டாஸ்மாக் பணியாளா்களுக்கான தொகுப்பூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் எம்.இன்னாசிமுத்து கூறியதாவது:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா் சங்கம் அக்டோபா் 2-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரின் அழைப்பை ஏற்று சங்க நிா்வாகிகள் பாலுசாமி, ராஜா, அருள்மணி, முருகானந்தம், மாசானமுத்து ஆகியோா் அவரை வியாழக்கிழமை சந்தித்தனா்.

இதில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வாய்ப்பில்லாத நிலையில், தொகுப்பூதியத்தை ரூ.45 ஆயிரம், ரூ.35 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்ற வீதத்தில் உயா்த்தி வழங்க வேண்டும். ரூ.10 லட்சம் சிறப்பு பணிக்கொடை, ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம், ரூ.5 ஆயிரம் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

காலி பாட்டில் சேகரிப்புப் பணியை பணியாளா்களிடம் திணிக்காமல் தனியாரிடம் வழங்க வேண்டும். பணியாளா் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நிா்வாகம் சாா்பில் இறுதியான முடிவு அறிவிக்கப்படும் வரை போராட்டத்துக்கான களப்பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்றாா்.