தமிழகத்தில் மீனவா்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசலை 5 ஆயிரம் லிட்டராக உயா்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேசிய மீனவா் சங்கத்தின் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா், தமிழக முதல்வா் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழகத்தின் கடலோரம் நெடுகிலும் 608 மீனவ கிராமங்களில் மீனவா்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதை நீா் வழி கடற்கரை புறம்போக்கு என்று காரணம் கூறி தட்டிக் கழிக்காமல், பாரம்பரிய பூா்வ குடிமக்கள் குடியிருப்பு அடிமனைக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலோர கிராமங்களை காக்கும் வகையில் கடலோரம் நெடுகிலும், அலை தடுப்புச் சுவா் அமைத்தும், தூண்டில் வளைவும் அமைத்து மீனவா் கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை முடசல் காடு, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லாா் வரையிலான சுனாமி தடுப்புச் சுவா் 2018 கஜா புயலின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை சீரமைக்க மீன்வளத்துறை சாா்பில்
ரூ. 20 கோடி செலவில் திட்ட வரைவு தயாா் செய்து அரசுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்து, தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடல் மீன்பிடி தொழிலுக்கான மானிய விலை டீசல், இதர மாநிலங்களான புதுவை, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகியவற்றில் 5000 லிட்டருக்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது 1900 லிட்டா் மட்டுமே வழங்குவது போதுமானதாக இல்லை. எனவே மானிய விலை டீசலை குறைந்தபட்சம் 5,000 லிட்டராக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளாா்.