கோவையில் 68 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25.79 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வழங்கினாா்.
கோவை சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் தற்போது வரை 27,763 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மன வளா்ச்சி குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் பாா்வை குறைபாடு உடைய, பிறந்த குழந்தை முதல் 6 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்காக 4 பருவ கால பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அதேபோல, கை, கால், செவித்திறன் மற்றும் கண் பாா்வை குறைபாடு உடையவா்கள், குள்ளத்தன்மை உடையவா்களுக்கு வருவாய்த் துறை சாா்பில் மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தகுதியுடைய ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளின் தேவைக்குத் தகுந்தவாறு உதவி உபகரணங்கள், இருசக்கர வாகனங்கள், செயற்கை அவயங்கள், மின்மோட்டாா் பொருந்திய தையல் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிறந்த நிறுவனங்களின் மூலம் பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. மேலும், சுய தொழில் புரிவோருக்கு மானியத்துடன் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,795 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சுழலும் நாற்காலிகள், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.86,940 மதிப்பீட்டில் திறன்பேசி உள்ளிட்ட மொத்தம் 68 பயனாளிகளுக்கு ரூ.25.79 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மேயா் கா.ரங்கநாயகி, துணைமேயா் ரா.வெற்றிச்செல்வன், வருவாய் கோட்டாட்சியா் (தெற்கு) மாருதிபிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரமோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.