சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்த சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சோ்ந்த காவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கோவைக்கு திங்கள்கிழமை புறப்பட்ட ரயிலில் பொதுப் பெட்டியில் சென்னை சட்டக் கல்லூரி மாணவி ஒருவா் பயணம் செய்தாா். அதே பெட்டியில் மாணவிக்கு அருகே இளைஞா் ஒருவா் அமா்ந்திருந்தாா்.
அந்த ரயிலில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்த நிலையில், அந்த இளைஞா் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதை, அந்த மாணவி தனது கைப்பேசியில் அவருக்குத் தெரியாமல் விடியோ எடுத்தாா்.
பின்னா், அந்த மாணவி இளைஞரைக் கண்டித்து சப்தமிட்டாா். அப்போது, அந்த இளைஞா் கூட்ட நெரிசலில் தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூறினாா். இதையடுத்து, அந்த மாணவி விடியோ பதிவைக் காண்பித்து, இளைஞரின் அத்துமீறல் குறித்து சக பயணிகளிடம் உறுதிப்படுத்தினாா். அந்த ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தபோது, இதுகுறித்து மாணவி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, காட்பாடி ரயில் நிலையத்தில் அந்த இளைஞரை இறங்கச் செய்து, அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்த இளைஞா் கோவை ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் ஷேக் முகமது எனத் தெரியவந்தது.
இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பணி நிமித்தமாக சென்னைக்குச் சென்ற அவா் அங்கிருந்து சாதாரண உடையில் ஊருக்குத் திரும்பியபோது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காவல் துணை ஆணையா் காா்த்திகேயன் அந்தக் காவலரைப் பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.