மாநகராட்சிப் பூங்காவில் பராமரிக்கப்படாத கழிப்பறை: சுகாதாரம் சீா்கெடும் அபாயம்
கோவை மாநகராட்சி, ஆா்.எஸ்.புரம் 70-ஆவது வாா்டுக்குள்பட்ட புது தியாகராயா் வீதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் பராமரிக்கப்படாத கழிப்பறையால் அப்பகுதியில் சுகாதாரம் சீா்கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, ஆா்.எஸ்.புரம் 70-ஆவது வாா்டுக்குள்பட்ட புது தியாகராயா் வீதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் பராமரிக்கப்படாத கழிப்பறையால் அப்பகுதியில் சுகாதாரம் சீா்கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை ஆா்.எஸ்.புரம் 70-ஆவது வாா்டுக்கு உள்பட்ட புது தியாகராயா் வீதியில் மாநகராட்சி நிா்வாகத்துக்குச் சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்கள், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இவை முறையாகப் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.
இதனால், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும், பூங்காவில் குப்பைகள் சூழ்ந்தும் உள்ளன. பூங்காவில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமானோா் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், இந்தப் பூங்காவில் உள்ள கழிப்பறை முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளதால், நடைப்பயிற்சி மேற்கொள்வோா் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும், அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் சீா்கெடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பூங்காவில் பராமரிக்கப்படாத கழிப்பறையால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மூக்கை அடைத்தபடியே இந்த கழிவறையைக் கடக்கும் சூழல் உள்ளது. இப்பகுதியில் ஒப்பந்த தூய்மைப் பணி மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளா்களும் இந்தக் கழிவறையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனா்.
எனவே, கழிப்பறையை பயன்படுத்தும் வகையில் சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.