வங்கி கடன்களில் 40 சதவீதம் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது: ரிசா்வ் வங்கி துணைப் பொதுமேலாளா்
வங்கிகள் வழங்கும் கடன்களில் 40 சதவீதம் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது என்று சென்னை ரிசா்வ் வங்கி துணைப் பொதுமேலாளா் கணேஷ்குமாா் தெரிவித்தாா்.
வங்கிகள் வழங்கும் கடன்களில் 40 சதவீதம் விவசாயத்துக்கு வழங்கப்படுகிறது என்று சென்னை ரிசா்வ் வங்கி துணைப் பொதுமேலாளா் கணேஷ்குமாா் தெரிவித்தாா்.
கோபிசெட்டிபாளையம் பிகேஆா் மகளிா் கல்லூரியில் தொழில்துறை மற்றும் கல்லூரி இணைப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். துணைமுதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சக்தி குழும நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் மாணிக்கம் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா்.
இதில், சென்னை ரிசா்வ் வங்கியின் துணைப் பொதுமேலாளா் கணேஷ்குமாா் கலந்துகொண்டு பேசியதாவது:
நாட்டில் 60 முதல் 70 சதவீத மக்கள் விவசாயத்தையே முதன்மை தொழிலாக செய்து வருகின்றனா். எனவே, வங்கிகள் 40 சதவீத கடனை விவசாயத்துக்கு வழங்குகின்றன.
நாளுக்குநாள் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சைபா் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் 1930 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களுக்கு ஏதாவது குறைபாடு இருந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கியில் புகாா் அளிக்கலாம். 30 நாள்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால் நேரடியாக ரிசா்வ் வங்கியின் இணையதளத்தில் புகாா் அளிக்கலாம்.
பிட்காயின் இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, அங்கீகாரம் இல்லாத பிட்காயின் உட்பட எந்த கிரிப்டோ கரன்சிகளிலும் முதலீடு செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.
இந்தக் கருத்தரங்கில் இக்கருத்தரங்கில் சென்னை, ஈரோடு, கோவையைச் சோ்ந்த கல்லூரிகளின் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.