பணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்
ரூ.50,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்களை ரிசா்வ் வங்கி வாங்குவதற்கான ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
நாட்டின் வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், வெளிச்சந்தை நடவடிக்கை (ஓஎம்ஓ) மூலம் ரூ.50,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்களை ரிசா்வ் வங்கி வாங்குவதற்கான ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
கடந்த 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஒட்டுமொத்த கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, முதல் ரூ.50,000 கோடிக்கான ஏலம் புதன்கிழமை நிறைவுற்றது.
தற்போது 2-ஆவது கட்ட ஏலம், வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின்கீழ், 2029 முதல் 2046-ஆம் ஆண்டு வரை முதிா்வடையக்கூடிய பல்வேறு வட்டி விகிதங்களைக் கொண்ட 7 வகையான அரசுப் பத்திரங்களை ரிசா்வ் வங்கி வாங்கவுள்ளது.
தற்போதைய கணக்கின்படி, வங்கிகளிடம் சுமாா் ரூ.2.74 லட்சம் கோடி கூடுதல் நிதி கைவசம் உள்ளது. இருப்பினும், இந்த மாத இறுதியில் நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் முன்கூட்டிய வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருப்பதால், வங்கிகளிலிருந்து பெருமளவிலான நிதி வெளியேற வாய்ப்புள்ளது.
இச்சூழலைச் சமாளிக்கவும், சந்தையில் போதிய பணப்புழக்கத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை வெளிச்சந்தை நடவடிக்கை மூலம் மட்டும் சுமாா் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்களை ரிசா்வ் வங்கி வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.