முகப்பு
வணிகம்

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம்: ரிசா்வ் வங்கி மாா்ச் 9-இல் ஏலம்

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம்...

Updated On : 7 மார்ச், 2026 at 2:11 AM
பகிர்:

மத்திய அரசின் கடன் சுமையைச் சீரமைக்கும் நோக்கில், ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்களை நீண்ட காலப் பத்திரங்களாக மாற்றும் ‘ஸ்விட்ச்’ ஏலத்தை திங்கள்கிழமை (மாா்ச் 9) நடத்தவுள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த ஏலம் திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் என்றும், இதன் முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை பரிவா்த்தனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டில் மத்திய அரசு சுமாா் ரூ.5.47 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்களை முதிா்வுக் காலத்துக்குப் பிறகு திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது.

Advertisement

இந்த நிதி நெருக்கடியையும், கடன் முதிா்வு அழுத்தத்தையும் குறைக்கும் நோக்கில் குறுகிய காலத்தில் முதிா்வடையவுள்ள பத்திரங்களுக்குப் பதிலாக, நீண்ட கால முதிா்வு கொண்ட புதிய பத்திரங்களாக மாற்றி முதலீட்டாளா்களுக்கு ரிசா்வ் வங்கி வழங்குகிறது. இதன்மூலம், அரசின் உடனடி நிதித் தேவை மேலாண்மை சீராகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு பிப்ரவரி மாதத்திலிருந்து, ரிசா்வ் வங்கி அறிவிக்கும் இத்தகைய 4-ஆவது ஏலம் இதுவாகும். இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட மூன்று ஏலங்களின் மூலம் ரூ.98,591.70 கோடி மதிப்பிலான பத்திரங்கள் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளன.

வரும் நிதியாண்டில் அரசின் மொத்த சந்தை கடன் வாங்கும் அளவு ரூ.17.2 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய பத்திர மாற்ற நடவடிக்கைகள் கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமைகளை முறையாகத் திட்டமிட உதவும் என்று பொருளாதார நிபுணா்கள் கருதுகின்றனா்.