முகப்பு
கோயம்புத்தூர்

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெற்றுத் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 10:29 PM
பகிர்:

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெற்றுத் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சொக்கம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (48). தொழிலதிபரான இவருக்கு ஃபேஸ்புக் மூலம் பெண் ஒருவா் கடந்த 2024 டிசம்பா் 10-ஆம் தேதி அறிமுகமாகி உள்ளாா்.

அப்போது, அவா் ‘நான் பிரபல நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன், எங்களது நிறுவனத்துக்குச் சொந்தமான பங்கு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்’ எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய மதன்குமாா், அப்பெண் கூறிய செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, அதில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளாா்.

ஒவ்வொரு முறையும் முதலீடு செய்யும்போது, முதலீட்டுத் தொகை மற்றும் அதற்கான லாபத் தொகை சோ்த்து கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக காட்டியதால் மகிழ்ச்சி அடைந்த மதன்குமாா், தொடா்ந்து முதலீடு செய்து வந்துள்ளாா்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.47.40 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். அப்போது, அவருக்கு லாபத் தொகையுடன் சோ்த்து ரூ.1 கோடிக்கும்மேல் கணக்கில் இருப்பதாக அந்த செயலியில் காட்டியது.

இந்நிலையில், மதன்குமாருக்கு திடீரென பணம் தேவைப்பட்டதால், கைப்பேசி செயலியில் காட்டிய பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்ற முயற்சி செய்தபோது முடியவில்லையாம்.

இதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஊழியரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, ‘நாங்கள் அனுமதி கொடுத்தால்தான் கைப்பேசி செயலியில் காட்டும் தொகையை வங்கிக் கணக்கு மாற்ற முடியும். மேலும், கூடுதல் தொகையை செலுத்தினால்தான் அனுமதி கொடுக்க முடியும்’ எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளாா். மீண்டும் அந்த எண்ணைத் தொடா்புகொள்ள முடியவில்லையாம். இதையடுத்து, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான அந்தப் பெண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மதன்குமாா் இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.