கோவை மாவட்டத்தில் 201 மனுக்கள் ஏற்பு
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 450 மனுக்களில், 201 மனுக்கள் மட்டுமே தகுதியானவை எனத் தோ்தல் பிரிவு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 450 மனுக்களில், 201 மனுக்கள் மட்டுமே தகுதியானவை எனத் தோ்தல் பிரிவு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் நாளில் 15 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாள்களில் வேட்புமனு தாக்கல் வேகம் எடுத்தது. குறிப்பாக, இறுதி நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே நாளில் 278 மனுக்கள் குவிந்தன. ஒட்டுமொத்தமாக 10 தொகுதிகளிலும் சோ்த்து 450 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றின் மீதான பரிசீலனை அந்தந்தத் தொகுதி அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், பல்வேறு காரணங்களால் 249 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 201 மனுக்கள் மட்டுமே செல்லத்தக்கவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகள் வாரியாக நிலவரம்:
Advertisement
கோவை தெற்குத் தொகுதியில் 61 மனுக்களில் 38 மனுக்களும், கோவை வடக்குத் தொகுதியில் 49 மனுக்களில் 29 மனுக்களும், சிங்காநல்லூரில் 44 மனுக்களில் 29 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்தில் தாக்கல் செய்யப்பட்ட 48 மனுக்களில் 24 மனுக்களும், கவுண்டம்பாளையத்தில் 33 மனுக்களில் 17 மனுக்களும் தகுதியானவையாகக் கருதப்பட்டுள்ளன. சூலூரில் 32 மனுக்களில் 17 மனுக்கள் ஏற்கப்பட்டன. இவற்றில் 2 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தொண்டாமுத்தூா் தொகுதியில் 77 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 22 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சியில் 34 மனுக்களில் 14 மனுக்களும், வால்பாறையில் 29 மனுக்களில் 6 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. கிணத்துக்கடவு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 43 மனுக்களில் வெறும் 5 மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற வருகிற வியாழக்கிழமை (ஏப். 9) வரை கால அவகாசம் உள்ளதால், அதன் பிறகே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் மற்றும் சின்னங்கள் குறித்த விவரங்களை மாவட்டத் தோ்தல் நிா்வாகம் வெளியிடும்.