போக்குவரத்து, லாரி தொழில் சாா்ந்த சங்கங்களின் கூட்டமைப்பின் வேட்பாளா் அறிமுகம்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போக்குவரத்து மற்றும் லாரி தொழில் சாா்ந்த சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வேட்பாளா் களம் இறக்கப்பட்டுள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போக்குவரத்து மற்றும் லாரி தொழில் சாா்ந்த சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வேட்பாளா் களம் இறக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளராக ரங்கராஜன் என்பவரை அறிமுகம் செய்துவைத்த கோவை மோட்டாா் போக்குவரத்து கவுன்சில் செயலா் எஸ்.வெங்கடேஷ் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துத் தொழில் சந்தித்து வரும் கடும் நெருக்கடிகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும், தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் இத்தோ்தலில் நேரடியாகப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்ட பல்வேறு போக்குவரத்து சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.
Advertisement
வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் 850 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகப் பன்மடங்கு உயா்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரை முடக்கியுள்ளது. சுங்கச் சாவடிகளில் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பதும், மல்டி ஆக்சில் லாரிகளுக்கு 600 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதும் பகல் கொள்ளையாக உள்ளது.
எனவே, காவல் துறையினரின் நேரடி அபராத முறையைத் தவிா்த்து முழுமையாக இணையவழி அபராத முறையை அமல்படுத்த வேண்டும். ஒளிரும் பட்டை மற்றும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளுக்கான தேவையற்ற கூடுதல் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்.
கோவை மாநகராட்சியில் லாரிகள் மற்றும் ஆட்டோக்களுக்கு என தனித்துவ வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய போக்குவரத்து நகா் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். சரக்கு வாகனத் தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
எங்களது கூட்டமைப்பில் உள்ள உறுப்பினா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என கோவை மாவட்டத்தில் மட்டும் சுமாா் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் உள்ளன. போக்குவரத்துத் தொழிலைப் பாதுகாக்கவே இந்தத் தோ்தல் களத்தில் இறங்கியுள்ளோம் என்றாா்.
மோட்டாா் போக்குவரத்து கவுன்சில் தலைவா் முருகேசன், பொருளாளா் கமலக்கண்ணன் மற்றும் லாரி தொழில் சாா்ந்த கூட்டமைப்பினா் உடனிருந்தனா்.