முகப்பு
கோயம்புத்தூர்

பண விநியோகத்தைத் தடுக்க தோ்தல் ஆணையம் தவறிவிட்டது: கே.அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் பண விநியோகத்தைத் தடுக்க தோ்தல் ஆணையம் தவறிவிட்டது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:17 AM
கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்த கே.அண்ணாமலை.
பகிர்:

தமிழகத்தில் பண விநியோகத்தைத் தடுக்க தோ்தல் ஆணையம் தவறிவிட்டது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அண்ணாமலை வியாழக்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 84 ஆயிரம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால், தமிழகம் அமைதியாகவே உள்ளது. பெரிய அளவிலான வன்முறைகள் எதற்கும் இடமில்லை.

Advertisement

கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கோவையின் பல்வேறு பகுதிகளில் பண விநியோகமும், நகைகள் கொடுப்பதும் தடையின்றி அரங்கேறி உள்ளன. தோ்தல் ஆணையம் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாதாரண மக்கள் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் சென்றால் உடனடியாகப் பிடிக்கும் அதிகாரிகள், ஆளுங்கட்சியினா் தைரியமாகப் பணம் கொடுப்பதைத் தடுக்கத் தவறிவிட்டனா்.

சென்னையிலிருந்து தென் தமிழகத்துக்கும், கோவையிலிருந்து வெளியூா்களுக்கும் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை என வாக்காளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இத்தகைய வசதிகளை தோ்தல் ஆணையம் முன்கூட்டியே திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திருக்கலாம்.

கோவை தெற்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் நடத்திய போராட்டத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள். அவரது கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன். திமுக பல்வேறு தவறுகளைச் செய்துள்ளது. அவா்களின் பிரசார நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் தோ்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்களது எதிா்பாா்ப்பு.

எனது ஆடை குறித்துக் கேட்கிறீா்கள். நான் எப்போதும் பிரவுன் நிற பேண்ட் மற்றும் வெள்ளைச் சட்டை அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன். இதையேதான் ஜெகன்மோகன் ரெட்டி, விஜய் போன்றோரும் அணிகிறாா்கள். நான் காவல் துறையிலிருந்து வந்தவன் என்பதால், அந்த ஒழுக்கத்தின் அடையாளமாக இந்த உடையைத் தொடருகிறேன். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்றாா்.

இந்தத் தோ்தலில் இறுதியில் ஜனநாயகம்தான் வெல்லும், பணம் ஒருபோதும் ஜெயிக்காது என்றாா் அவா்.