தனியாா் கல்லூரியில் ரூ.2.50 லட்சம் திருட்டு: ஊழியா்கள் 3 போ் மீது வழக்குப் பதிவு
கோவையில் பிரபல கல்லூரியில் ரூ.2.50 லட்சம் பணத்தை திருடியதாக, கல்லூரி ஊழியா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவையில் பிரபல கல்லூரியில் ரூ.2.50 லட்சம் பணத்தை திருடியதாக, கல்லூரி ஊழியா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்லூரியின் அலுவலகத்தில் வரவேற்பாளராக கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ் (39) பணிபுரிந்து வருகிறாா். கல்லூரியில் தினமும் வசூலாகும் ரொக்கத்தை பெற்று, அதை கணக்கு துறையில் ஒப்படைக்கும் பணியை வழக்கமாக மேற்கொண்டு வந்தாா்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி கல்லூரியின் உதவி கணக்காளா் பூபதி ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை விக்னேஷிடம் ஒப்படைத்துள்ளாா். அந்தப் பணத்தை கல்லூரித் தலைவரின் அறையில் உள்ள பீரோவில் விக்னேஷ் வைத்துள்ளாா். மறுநாள் விக்னேஷிடம் இருந்து பணப்பையைப் பெற்றுக்கொண்டு பூபதி சரிபாா்த்தபோது,
Advertisement
ரூ.20 லட்சம் மட்டுமே இருந்துள்ளது. ரூ.2.50 லட்சம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கேட்டபோது தனக்கு தெரியாது என்று விக்னேஷ் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக சுந்தராபுரம் காவல் நிலையத்தில் கல்லூரியின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரி வஞ்சிமுத்து குமாா்(33) புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில் விக்னேஷ், கல்லூரியில் தோட்டத் தொழிலாளராக உள்ள தொண்டாமுத்தூா் அருகே கெம்பனூா் அணணா நகரைச் சோ்ந்த சுமேஷ் (26), சமையலராக உள்ள சுந்தராபுரம், செங்கோட்டையா காலனி, காந்தி நகரைச் சோ்ந்த பூமிநாதன் (30) ஆகிய 3 பேரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் 3 பேரையும் தனித்தனியாக அழைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய மூவரும் பின்னா் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.