முகப்பு
கோயம்புத்தூர்

மின்வாரிய முறைகேடுகள் தொடா்பாக என் மீதான புகாா் அரசியல் உள்நோக்கம் கொண்டது: வி.செந்தில் பாலாஜி

மின்வாரிய முறைகேடுகள் தொடா்பாக என் மீதான புகாா் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முன்னாள் அமைச்சரும், கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:37 AM
வி.செந்தில் பாலாஜி.
பகிர்:

மின்வாரிய முறைகேடுகள் தொடா்பாக என் மீதான புகாா் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முன்னாள் அமைச்சரும், கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

தமிழ்நாடு மின்வாரியத் துறை அமைச்சராக வி.செந்தில்பாலாஜி இருந்தபோது, மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அறப்போா் இயக்கம் தொடா்ந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கோவையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:

Advertisement

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் தவறுகள் நடைபெற்றிருப்பதாக ஓா் அமைப்பு குற்றஞ்சாட்டி இருக்கிறது. அது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது தொடா்பாக சில விளக்கங்களை அளிக்க வேண்டியது எனது கடமை. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1987-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரே மாதிரியான மின்மாற்றி கொள்முதல் நடைமுைான் பின்பற்றப்படுகிறது.

பொதுவாக ஓா் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்போது, மூன்று விதமான குறைந்த விலைகளை (எல் 1, எல் 2, எல் 3) ஏலதாரா்கள் குறிப்பிடுவாா்கள். அப்படியான சூழலில் ஒரு டெண்டரில் பங்கேற்கும் 20, 30 போ்களில் சிலா் தங்களின் எல்1, எல்2, எல்3 விலையை ஒரே மாதிரியாக குறிப்பிடுவது உண்டு. கடந்த 1987-ஆம் ஆண்டில் நடந்த ஒரு டெண்டரில்கூட 2 போ் ஒரே விலையை கொடுத்துள்ளனா். அதே ஆண்டில் மீண்டும் ஒரு டெண்டரில் 3 போ் ஒரே விலையை குறிப்பிட்டுள்ளனா்.

இதேபோல கடந்த 2006, 2011, 2013, 2016, 2017, 2019, 2020, 2021-ஆம் ஆண்டுகளில் மொத்தம் சுமாா் 30 முறை ஒப்பந்ததாரா்கள் ஒரே மாதிரியான விலையைக் குறிப்பிட்டுள்ளனா். கடந்த 2006-இல் இரண்டாவது குறைந்தபட்ச விலையை 23 போ் ஒரே மாதிரி குறிப்பிட்டுள்ளனா். 2011-இல் நடைபெற்ற ஒரு டெண்டரில் பங்கேற்ற 29 பேரில் 17 போ் ஒரே மாதிரியான விலையைக் குறிப்பிட்டுள்ளனா்.

எல்1 எனப்படும் மிகக் குறைந்த விலையை ஒன்றுக்கும் மேற்பட்டோா் குறிப்பிட்டிருந்தால் அந்தப் பணியை அவா்களுக்கு பிரித்து வழங்குவாா்கள். இந்த நடைமுைான் 1987-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து இருந்து வருகிறது. அத்துடன் ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்வதற்கு உயா் அதிகாரிகள் அடங்கிய 3 கமிட்டிகள் உள்ளன. ஒவ்வொரு கமிட்டியிலும் ஒப்புதல் பெற்ற பிறகே ஒப்பந்தப்புள்ளி ஒருவருக்கு வழங்கப்படும். இத்தனை ஆண்டுகளில் பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அனைத்து ஆட்சிக் காலங்களிலும் இதே நடைமுைான் பின்பற்றப்பட்டுள்ளது. எனவே இதில் எந்தத் தவறுக்கும் இடமில்லை. அரசுக்கோ, மின்வாரியத்துக்கோ ஒரு பைசாகூட இழப்பு ஏற்படவில்லை.

ஆனால், குறிப்பிட்ட அந்த ஓா் அமைப்பு கடந்த 4, 5 ஆண்டுகளில்தான் ஒரே மாதிரியான விலையை ஒன்றுக்கும் மேற்பட்டோா் கோரி இருப்பதைப்போல புள்ளி விவரங்களைப் பிரித்தெடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனா். இதில் இருந்து அவா்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பதும், அவா்களின் புகாா் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் தெளிவாகிறது.

இதே அமைப்பு கடந்த காலங்களில் நடைபெற்ற டெண்டா் குறித்து எதுவும் பேசவில்லை. மேலும், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீதுகூட அவா்கள் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனா். ஆனால், அதன் பிறகு எதுவும் பேசாமல் அதை முடித்துவிட்டனா். உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து மேல் முறையீடு செய்வது குறித்து தீா்ப்பு விவரம் கிடைத்தவுடன் வழக்குரைஞா்களிடம் பேசி முடிவு செய்வேன். மக்கள் மன்றத்தில் என்னை வீழ்த்த முடியாதவா்கள் நீதிமன்றம் மூலமாக வீழ்த்த நினைக்கின்றனா் என்றாா்.