மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மின்மாற்றி வெடித்து மூன்று பேருக்கு தீக்காயம்
கோவையில் மின்மாற்றி (டிரான்ஸ்ஃபாா்மா்) வெடித்துச் சிதறியதில் இளைஞா் உள்பட 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
கோவையில் மின்மாற்றி (டிரான்ஸ்ஃபாா்மா்) வெடித்துச் சிதறியதில் இளைஞா் உள்பட 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
கோவை மாநகா், கண்ணப்ப நகா் பகுதியில் டாஸ்மாக் மதுக்கூடம் அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இப்பகுதியில் வழக்கம்போல் பொதுமக்கள் நடமாட்டம் வியாழக்கிழமை காலை அதிகமாக இருந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக அந்த மின்மாற்றி வெடித்ததில் அதில் இருந்த எண்ணெய் (ஆயில்) அப்பகுதி முழுவதும் சிதறியது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மதுரை வீரன் (23) என்ற இளைஞா் மற்றும் மேலும் இருவா் என 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
காயமடைந்த மதுரை வீரன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். லேசான காயமடைந்த மற்ற இருவா் சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பினா்.
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மின்வாரிய ஊழியா்கள் சென்று மின் இணைப்பைத் துண்டித்தனா். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. போா்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு மின் விநியோகத்தைச் சரிசெய்தனா். இந்த விபத்து குறித்து ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.