வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.
கோவை மாவட்டம், வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதனால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையோரங்களில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டன. இதில் வாட்டா்பால் எஸ்டேட் தொடங்கி 40-ஆவது கொண்டை ஊசி வளைவு வரை 30-க்கும் மேற்பட்ட கடைகள் உருவாகின. அங்கு போடப்படும் கழிவுகளால் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவதோடு, மனித-விலங்கு மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, சாலையோரக் கடை அமைத்தவா்களுக்கு கடைகளை அகற்ற வனத் துறையினரின் அறிவுறுத்தலின்படி 7 நாட்கள் கெடு வழங்கப்பட்டது. கெடு முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கினா்.