திருப்பூா் மாவட்டத்தில் குட்கா, ஹெராயின் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 11 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகா், மங்கலம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பல்லவராயன்பாளையம் பகுதியிலுள்ள தனியாா் கிடங்கில் சட்டவிரோதமாக குட்கா வைத்திருப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா சுமாா் 260 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல தடை செய்யப்பட்ட ஹெராயின் வைத்திருந்த 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஞ்சம்பாளையம், நஞ்சப்பா நகா் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த தினேஷ் சஹானி (38), இந்திரஜித்குமாா் சஹனி (35), ரவி மாக்டோ (52) ஆகியோரை சோதனை செய்ததில் 2 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆலமரம் பேருந்து நிலையம் அருகே ரஞ்சித் (25) என்பவரை போலீஸாா் சோதனை செய்ததில் குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தட்டா தோட்டம் அருகே போலீஸாா் சோதனை செய்து கொண்டிருந்தபோது சுரேஷ்பாபு (45) என்பவரை சோதனை செய்தனா். அவரிடம் இருந்து குட்கா, புகையிலை, சிகரெட் சுமாா் 26 பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பூச்சிபாளையம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த பெண்ணை சோதனை செய்ததில், தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இதேபோல தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காங்கேயம்பாளையம் அருகே மதாா்சா(47), பெரிச்சிபாளையம் அருகே பெண் ஒருவா், ரவிச்சந்திரன் (42), வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடுவம்பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நடராஜன் (40) ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனா்.